You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
40,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த நியாண்டர்தால்களின் தடயம் இன்றும் மனிதர்களிடம் உள்ளதா?
- எழுதியவர், மார்கரிட்டா ரோட்ரிக்ஸ்
- பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்ட போதிலும், நியாண்டர்தால் மனிதர்கள் இன்னும் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்துவதிலும், செய்திகளில் இடம்பிடிப்பதிலும் தங்களது புகழை தக்க வைத்துள்ளனர்
ஒரு காலத்தில் நாமும் நியாண்டர்தால்களும் இந்த பூமியைப் பகிர்ந்து வாழ்ந்தோம். மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் நெருங்கிய உறவினர்களான அவர்கள் சுமார் 4 லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தனர். அவர்களின் மரபணு பாரம்பரியம் இன்றும் நம்மைச் சூழ்ந்திருக்கிறது.
உண்மையில், நியாண்டர்தால்களிடமிருந்து நாம் பெற்ற சில மரபணு பண்புகள் மனிதர்களுக்கு பரிணாம வளர்ச்சியில் முன்னிலை அளித்ததுடன், உயிர்வாழ உதவியதாக சில நிபுணர்கள் நம்புகின்றனர்.
முழுமையான நியண்டர்தால் மரபணுவின் முதல் உயர்தரப் பிரதி எடுக்கப்பட்டதிலிருந்து, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தற்போதைய மக்களிடம் அதன் தடயங்களைத் தேடி வருகின்றனர்.
அத்தகைய ஆராய்ச்சியாளர்களில் ஒரு குழு, லத்தீன் அமெரிக்க மக்களை மாதிரியாகக் கொண்டு ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை 2023ஆம் ஆண்டு வெளியிட்டது.
"லத்தீன் அமெரிக்க தன்னார்வலர்களுடனான இந்தத் திட்டம், நியண்டர்தால் ஐரோப்பியர்களின் முன்னோடி மட்டுமல்ல, பூர்வீக அமெரிக்கர்களின் முன்னோடியும் கூட என்பதை மிக நன்றாகக் காட்டுகிறது," என்று இந்த ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான மரபியல் நிபுணர் பியர் ஃபாக்ஸ் பிபிசி முண்டோவிடம் கூறுகிறார்.
"பூர்வீக அமெரிக்கர்கள் மனிதகுலத்தின் ஆசியக் கிளையிலிருந்து வந்தவர்கள். சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால்களும் நவீன மனிதர்களும் இனக்கலப்பு செய்தபோது ஏற்பட்ட மரபணு தாக்கம் அவர்களிடமும் காணப்படுகிறது,"
இவ்வாறு, அந்த கலப்பின் விளைவாக உருவான முன்னோர்களின் மரபணுக்கள் "படாகோனியா வரை சென்றடைந்தன."
இந்த ஆய்வின் மற்றொரு ஆசிரியரான மானுடவியலாளர் மிகுயெல் எட்வர்டோ டெல்கடோவின் கருத்துப்படி, இது போன்ற ஆராய்ச்சிகள் "அனைத்து மனிதர்களும் ஒன்றுதான்" என்பதை நிரூபிக்கின்றன.
"மனிதர்களிடையே உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்று யாரும் இல்லை, நாம் அனைவரும் ஒரே பன்முகத்தன்மையின் ஒரு பகுதியே," என்று அவர் பிபிசி முண்டோவிடம் கூறுகிறார்.
"லத்தீன் அமெரிக்க மக்கள் தொகைகள் ஒப்பீட்டளவில் சமீபத்தில் உருவானவையாக இருந்தாலும், அவை பல்வேறு பரிணாம வளர்ச்சி செயல்முறைகளைக் கடந்த மிகவும் பழமையான மக்கள்குழுக்களின் கலவையாக உள்ளன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்," என்று அவர் கூறுகிறார்.
இவ்வாறு, அவர்களின் மரபணுத் தொகுப்பின் ஒரு பகுதி நியண்டர்தால்களுடன் தொடர்புடையதாக உள்ளது.
அந்த ஆராய்ச்சி லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவைச் சேர்ந்த டஜன் கணக்கான ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதில் லத்தீன் அமெரிக்காவில் 6,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளனர்.
தொடக்கப் புள்ளி
இந்த ஆய்வுக்குப் பின்னால் லத்தீன் அமெரிக்காவின் பன்முகத்தன்மை மற்றும் பரிணாம பகுப்பாய்வுக்கான கூட்டமைப்பு உள்ளது. 2010-ல் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் மனித மரபியல் பேராசிரியராக இருந்த இந்த கூட்டமைப்பின் முக்கிய ஆய்வாளர் ஆண்ட்ரெஸ் ரூயிஸ் லினாரெஸ் ஓர் அறிவியல் திட்டத்திற்காக லத்தீன் அமெரிக்காவில் உள்ள மானுடவியலாளர்கள் மற்றும் மரபியல் நிபுணர்களைத் தொடர்பு கொண்டபோது இந்த கூட்டமைப்பு தொடங்கியது.
மெக்சிகோ, கொலம்பியா, பெரு, சிலி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் நகர்ப்புற மக்களின் உடல் தோற்றம் மற்றும் மரபணுத் தொகுப்பை வகைப்படுத்துவது இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.
இந்தக் குழுவில் இணைந்த நிபுணர்களில் ஒருவர் மக்கரேனா புவென்டெஸ் குவாஜார்டோ . அவர் சிலியில் 2,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்ற ஆராய்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இப்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் கல்வியாளராக இருக்கும் அவர், பிபிசி முண்டோவிடம், 2012 மற்றும் 2014-க்கு இடையில் மற்ற நான்கு நாடுகளிலும் உள்ள தனது சக ஆராய்ச்சியாளர்களும் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களிடமிருந்து மாதிரிகளைச் சேகரித்ததாக தெரிவித்தார்
டிஎன்ஏ-வைப் பெறுவதற்காக உயிரியல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, அதிலிருந்து மரபணு வகை பெறப்பட்டது.
மேலும், நாம் காணக்கூடிய பண்புகளான தோற்றவமைப்பு பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டன, எடுத்துக்காட்டாக முடி, கண்கள், தோல் நிறம் உள்ளிட்டவை.
பங்கேற்பாளர்களின் முகப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன, அதே போல் தலையின் சுற்றளவு, இடுப்பு, எடை, உயரம் போன்ற மானுடவியல் அளவீடுகளும் எடுக்கப்பட்டன.
கூடுதலாக, சுமார் 1,000 பேர் கொண்ட குழுவிடம் பல் அச்சுகள் எடுக்கப்பட்டன.
நியண்டர்தால் பற்றிய யோசனை எப்படி வந்தது?
சேகரிக்கப்பட்ட தகவல்களின் அளவு மிகப் பெரியதாக இருந்தது. அவை பல்வேறு வகையான ஆய்வுகளுக்கான அடிப்படையாக அமைந்தன. அவற்றில் ஒன்று, மக்களின் மூதாதையர் மரபை கண்டறியும் ஆய்வு ஆகும்.
"ஒரு சாதாரண லத்தீன் அமெரிக்க நபரின் மரபணுக்களில் பொதுவாக மூன்று முக்கிய மூதாதையர் மரபுகளின் கலவை காணப்படும். அவை பூர்வகுடி அமெரிக்கர், ஐரோப்பியர் மற்றும் ஆப்பிரிக்கர் மரபுகள். இந்தக் கலவை அவர்களின் டிஎன்ஏ-வில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. மேலும், இது அந்தப் பகுதியின் வரலாற்றுடன் நெருக்கமாக தொடர்புடையதற்கான சான்றாகவும் உள்ளது'' என்கிறார் புவென்டெஸ்.
மரபணு ஆய்வுகள்
"ஜீனோம்-வைட் அசோசியேஷன் எனப்படும் புள்ளிவிவரப் பகுப்பாய்வைப் பயன்படுத்தி, சுமார் 6,000 மக்களின் 700,000 மரபணு அடையாளங்களை ஒரே நேரத்தில் பகுப்பாய்வு செய்து, அவற்றின் தோற்றவமைப்புத் தகவல்களுடன் ஒப்பிட்டு, நாங்கள் பகுப்பாய்வு செய்த வெவ்வேறு தோற்றவமைப்புகளுடன் தொடர்புடைய மரபணுப் பகுதிகளைக் கண்டறிய முடிந்தது." என்கிறார் புவென்டெஸ்
லத்தீன் அமெரிக்கர்களின் இந்த மாதிரிகள் நியண்டர்தால்களிடமிருந்து நாம் எதைப் பெற்றோம் என்பதைக் கண்டறிய உதவுமா என்ற யோசனை அப்போதுதான் வந்தது.
"அந்த யோசனை பிறகுதான் வந்தது, மாதிரி சேகரிக்கும்போது அது இல்லை," என்கிறார் புவென்டெஸ். "தொழில்நுட்ப முன்னேற்றங்களோடு அது இணைந்தது."
"நியண்டர்தாலுடன் ஒப்பீடு செய்ய, ஒரு நியண்டர்தால் மரபணுத் தொடர் தேவை. அப்போது அந்தத் துறை இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருந்தது."
2022-ல் ஸ்வீடனின் ஸ்வாண்டே பாபோ நியண்டர்தால்களின் மரபணுக் குறியீட்டை விடுவித்ததற்காக நோபல் பரிசு பெற்றார்.
இந்த இனம் சுமார் 400,000 முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு இன்று ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நியண்டர்தால்களுக்கும் நவீன மனிதர்களுக்கும் இடையிலான கலப்பினால், யூரேசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் 2% நியண்டர்தால் டிஎன்ஏ-வைக் கொண்டுள்ளனர் என ஆய்வுகள் காட்டுகின்றன.
"அவர்கள் முற்றிலும் அழியவில்லை. நம்மில் சிலருக்குள் அவர்கள் இன்னும் கொஞ்சம் வாழ்கிறார்கள்," என 2010-லேயே பாபோ பிபிசியிடம் கூறியிருந்தார்.
முதல் நியண்டர்தால் மரபணுவின் வரிசை முறையை உருவாக்கியது லத்தீன் அமெரிக்காவின் பன்முகத்தன்மை மற்றும் பரிணாம பகுப்பாய்வுக்கான கூட்டமைப்பு போன்ற உலகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சிக் குழுக்கள் தங்கள் எல்லைகளை விரிவாக்குவதற்கான கதவைத் திறந்தது.
"திட்டம் முன்னேறியபோது, குழுவில் இருந்த சிலர் 'இந்தத் தரவுகளில் நியாண்டர்தால்களின் தடயங்கள் உள்ளனவா என்று ஏன் பார்க்கக்கூடாது?' என்று கேள்வி எழுப்பினர். அப்படித்தான் இந்த நியாண்டர்தால் ஆய்வு தொடங்கியது,'' என்று புவென்டெஸ் நினைவு கூறுகிறார்.
"ஒப்பீட்டளவில் புதியவர்கள்"
ஆய்வின்போது, மூக்கின் உயரத்துடன் தொடர்புடைய ஒரு மரபணுப் பகுதியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த மரபணுப் பகுதி நியாண்டர்தால்களிடமும் காணப்பட்டது. அதே மரபணுத் தடயம், பூர்வகுடி அமெரிக்கர் வம்சாவளியைக் கொண்ட சில லத்தீன் அமெரிக்கர்களிடமும் இருப்பதை அவர்கள் கவனித்தனர்.
"இதை எப்படித் தெரிந்துகொள்ள முடிகிறது?" என்று புவென்டெஸ் விளக்குகிறார்.
"லத்தீன் அமெரிக்க மக்கள் ஒப்பீட்டளவில் சமீபத்தில் உருவான மக்கள்தொகை என்பதால்தான். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பூர்வகுடி மக்கள் மட்டுமே வாழ்ந்தனர். பின்னர் வெளிநாட்டினர் வந்தனர், கலப்புத் திருமணங்கள் நடந்தன. அதன் விளைவாகவே இன்றைய லத்தீன் அமெரிக்க சமூகம் உருவானது. இந்த ஒப்பீட்டளவில் சமீபத்திய கலப்பு, மரபணு ஆய்வுகளுக்கு ஒரு நன்மையாக உள்ளது. ஏனெனில் கலப்பு நிகழ்ந்த காலம் அதிகம் பழமையானதல்ல. அதனால் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த பல்வேறு மனிதக் குழுக்களிடமிருந்து வந்த மரபணுத் துண்டுகளை எளிதாக அடையாளம் காண முடிகிறது," என்று அவர் கூறுகிறார்
எனவே, 2023-ல், ஆராய்ச்சியாளர்கள், 'கம்யூனிகேஷன்ஸ் பயாலஜி' இதழில், "மனிதர்களின் மூக்கு வடிவத்தில் நியாண்டர்தால் மரபணுக்களின் தாக்கம்: முக அமைப்புடன் தொடர்புடைய புதிய மரபணுத் தடயங்களை கண்டறிந்த ஆய்வு" என்ற ஆய்வை வெளியிட்டனர்.
அந்த ஆண்டில், லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி தனது இணையதளத்தில், 'நியண்டர்தால்களிடமிருந்து மரபுரிமையாகப் பெறப்பட்ட மூக்கு வடிவ மரபணு' என்ற கட்டுரையை வெளியிட்டது.
''நியாண்டர்தால்களிடமிருந்து பெறப்பட்ட சில டிஎன்ஏக்கள் நமது முகத்தின் வடிவத்தை பாதிக்கின்றன என்பதை இந்த ஆய்வில் கண்டறிந்தோம். இந்த மரபணுப் பண்பு நமது முன்னோர்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கலாம். அதனால்தான் அது ஆயிரக்கணக்கான தலைமுறைகள் கடந்து இன்றுவரை தொடர்ந்திருக்கிறது.'' என்று ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரும் பிரிட்டனின் ஓபன் யுனிவர்சிட்டியின் கல்வியாளருமான கௌஸ்துப் அதிகாரி கூறினார்.
குரோமோசோம் வரைபடத்தில் பயணம்
ஃபாக்ஸ் இப்போது பிரான்சின் தேசிய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். அவர்லத்தீன் அமெரிக்காவின் பன்முகத்தன்மை மற்றும் பரிணாம பகுப்பாய்வுக்கான கூட்டமைப்பு திட்டத்தில் லத்தீன் அமெரிக்க மக்களின் வம்சாவளியை ஆய்வு செய்யவும், அவர்களின் டிஎன்ஏ-வில் எந்தப் பகுதிகள் நியண்டர்தால்களிடமிருந்து பெறப்பட்டன என்பதைக் கண்டறியவும் பணியாற்றத் தொடங்கினார்.
இந்த நோக்கத்துடன், ஆராய்ச்சிக் குழு ஒருபுறம் நியாண்டர்தால்களின் மரபணுத் தொகுப்பையும், மறுபுறம் ஆய்வில் பங்கேற்ற லத்தீன் அமெரிக்கர்களின் மரபணுத் தொகுப்புகளையும் மிக விரிவாக ஆய்வு செய்தது. பின்னர் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தது.
இதை எப்படிச் செய்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள, அனைத்து குரோமோசோம்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துள்ள ஒரு வரைபடத்தை ஸ்கேன் செய்வதாகக் கற்பனை செய்துகொள்ளுமாறு ஃபாக்ஸ் கூறுகிறார்.
"ஜிபிஎஸ் ஒருங்கிணைப்புகள் ஒரு வரைபடத்தில் ஒரு நகரத்தைக் கண்டறிய உங்களுக்கு உதவுவது போலவே, இந்த விஷயத்தில், மரபணு ஒருங்கிணைப்புகள் (நியண்டர்தால்கள் மற்றும் லத்தீன் அமெரிக்கர்களுடைய) மரபணுவின் ஒரு பகுதிக்கு எங்களை அழைத்துச் சென்றன, அது ஒரு மூக்கின் பண்போடு தொடர்புடையதாக உள்ளது."
இவ்வாறு, மாதிரியில் உள்ள பல உறுப்பினர்கள் அந்தப் பகுதியில் நியண்டர்தால்களிடமிருந்து பெறப்பட்ட மரபணுப் பொருளைக் கொண்டிருப்பதையும், அது அவர்களின் மூக்குகள் உயரமாக இருக்க உதவுவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
மூக்கின் மேல் பகுதியில் உள்ள உயரமான புள்ளியிலிருந்து, மூக்கின் கீழ்பகுதி வரை உள்ள தூரமே மூக்கின் உயரமாகக் கணக்கிடப்படுகிறது.
"ஆயிரக்கணக்கான லத்தீன் அமெரிக்கர்கள் பங்கேற்ற இந்த ஆய்வு இல்லையென்றால், இந்த மரபணுவையும் மூக்கின் உயரத்தில் அதன் தாக்கத்தையும் எங்களால் கண்டறிந்திருக்க முடியாது," என்கிறார் ஃபாக்ஸ்.
"எங்கள் ஆய்வில் பங்கேற்ற லத்தீன் அமெரிக்கர்களின் மரபணுத் தரவுகளில் சுமார் 45% பூர்வகுடி அமெரிக்கர்களின் மரபணுப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவை என்பதால், இந்தத் தொடர்பை எங்களால் தெளிவாகக் காண முடிந்தது," என்று அவர் விளக்குகிறார்.
"நாங்கள் ஒரு மரபணுவை மட்டும் கண்டுபிடிக்கவில்லை. மரபணுத் தொகுப்பின் அந்த குறிப்பிட்ட பகுதியில் நியாண்டர்தால்களின் மரபணுத் தடயத்தையும் வெளிப்படுத்தினோம்," என்று அவர் கூறுகிறார்.
"இந்தக் கண்டுபிடிப்பு லத்தீன் அமெரிக்கர்களின் இந்த மாதிரிகளால்தான் சாத்தியமானது; இல்லையெனில் அது மிகவும் கடினமாக இருந்திருக்கும்."
"97 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களிடம் நியண்டர்தால்களிடமிருந்து வந்த இந்த சிறிய டிஎன்ஏ துண்டை நாங்கள் பெற்றபோது, அதை அந்த நபர் தனது பூர்வீக அமெரிக்க முன்னோர்களிடமிருந்து மரபுரிமையாகப் பெற்ற ஒரு பிரிவில் எப்போதும் கண்டோம்."
"அதன் பொருள் என்னவென்றால், நியண்டர்தாலின் சிறிய பகுதி ஆசியர்களால் மரபுரிமையாகப் பெறப்பட்டது, அவர்கள் சுமார் 15,000 முதல் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு அலாஸ்காவுக்கு வந்து அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலும் குடியேறத் தொடங்கினர்."
முகங்கள் மற்றும் மண்டை ஓடுகளின் விவரங்கள்
மரபணு ஸ்கேன் மூலம் மட்டுமல்லாமல், தன்னார்வலர்களின் முகங்களை விரிவாக பகுப்பாய்வு செய்ததன் மூலமும் இந்தத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது.
சீனாவின் புடான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான கிங் லி ஆய்வில் பங்கேற்றவர்களின் முகப் புகைப்படங்களில் 34 உடற்கூறு அடையாளப் புள்ளிகளை குறியிட்டு, ஒவ்வொரு புள்ளிக்கும் இடையிலான தூரங்களை கணக்கிட்டார்.
அர்ஜென்டினாவின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர் டெல்காடோ, கணினி டோமோகிராபி மூலம் உருவாக்கப்பட்ட நியாண்டர்தால் மண்டையோட்டுகளின் 3டி மாதிரிகளில் அதே புள்ளிகளைக் குறியிட்டார்.
இதன் மூலம், முகத்தின் பல்வேறு உடல் அம்சங்கள் துல்லியமாக வரையறுக்கப்பட்டன.
"சிலரிடம் முகத்தின் உயரத்திற்கும் (அதில் மூக்கின் உயரமும் அடங்கும்) நியாண்டர்தால் மூதாதையர் மரபிற்கும் தெளிவான தொடர்பு இருப்பதை கண்டறிந்தோம். முகமும் மூக்கும் உயரமாக இருக்கும் நபர்களின் முக அமைப்பு, நியாண்டர்தால்களின் முக அமைப்புடன் அதிக ஒற்றுமை கொண்டிருந்தது,'' என்று டெல்காடோ விளக்குகிறார்.
இந்த ஆய்வின் முக்கியத்துவம்
ஆய்வின் ஆசிரியர்களின் கூற்றுப்படி, லத்தீன் அமெரிக்கர்களின் மாதிரியில் பங்கேற்ற சிலரிடம் நியாண்டர்தால் மரபணுத் தடயங்கள் இருப்பது அறிவியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.
"இந்த நியாண்டர்தால் மரபணுப் பகுதியின் தாக்கம்தான் இதன் முக்கியத்துவம். நீளமான மூக்குகளுடன் இது தொடர்புடையதாக இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்,'' என்று ஃபாக்ஸ் குறிப்பிடுகிறார்.
"இப்போது இந்த தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த பண்பின் பரிணாம வளர்ச்சி தொடர்பான காரணங்கள் குறித்து நாம் யூகிக்க முடியும்,"
டெல்கடோவின் கருத்துப்படி, லத்தீன் அமெரிக்க மக்களின் டிஎன்ஏ-வின் ஒரு பகுதி நியண்டர்தால்களோடு தொடர்புடையதாக இருப்பது "காலநிலை அல்லது உணவு போன்ற குறிப்பிட்ட மாற்றங்களுக்கு நாம் பழகிக்கொள்ள உதவியிருக்கலாம்."
சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில், நியண்டர்தால் மரபோடு தொடர்புடைய சில நோய்கள் உள்ளன, என அவர் குறிப்பிடுகிறார்.
லத்தீன் அமெரிக்காவில் அவற்றின் தாக்கம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியிருந்தாலும், இத்தகைய மரபணு ஆய்வுகள் சில நோய்களின் காரணங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரலாம். அதன்மூலம் அவற்றைப் பற்றி மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளவும், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சாத்தியமான சிகிச்சை முறைகளை உருவாக்கவும் உதவலாம்.
மாட்ரிட்டில் உள்ள ஸ்பெயின் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலின் பேராசிரியரும், தேசிய இயற்கை அறிவியல் அருங்காட்சியகத்தின் பழைய மனிதவியல் குழுவின் இயக்குநருமான அன்டோனியோ ரோசாஸ், இந்த ஆய்வில் பங்கேற்கவில்லை.
ஆனால் அவர் பிபிசி முண்டோவிடம் பேசுகையில், இந்த ஆய்வில் இரண்டு அம்சங்கள் மிகவும் முக்கியமானவை என்று கூறினார்.
"முதலாவது, நியாண்டர்தால்களிடமிருந்து மனிதர்களுக்கு வந்த மரபணுத் தகவல்கள் மனித முக அமைப்பில் வெளிப்படுகின்றன. குறிப்பாக, மூக்கின் உயரம் மற்றும் வடிவத்துடன் அவை தொடர்புடையவை என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. இரண்டாவது, லத்தீன் அமெரிக்க மக்களையும் அவர்களுடைய மரபணு பல்வகைத் தன்மையையும் ஆய்வில் சேர்த்திருப்பது முக்கியமான பங்களிப்பாகும்," என்றார்.
இதுவரை இத்தகைய பல ஆய்வுகள் பெரும்பாலும் ஐரோப்பியர்களை மையமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அடுத்தடுத்த ஆய்வில், ஆராய்ச்சிக் குழு நியாண்டர்தால்கள் மற்றும் லத்தீன் அமெரிக்கர்களின் பற்களின் அமைப்பை ஆய்வு செய்தது
தன்னார்வலர்களின் பற்களிலிருந்து எடுக்கப்பட்ட அச்சு மாதிரிகளை ஸ்கேன் செய்து உருவாக்கப்பட்ட 3டி மாதிரிகள் மற்றும் நியாண்டர்தால்களின் பற்கள் தொடர்பான அளவீடுகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது, பற்களின் அளவும் வடிவமும் நியாண்டர்தால்களிடமிருந்து வந்த மரபணுப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
"முன்பற்களின் அகலம், நியாண்டர்தால் மரபணு தாக்கத்துடன் நேரடியாக தொடர்புடையதாக இருப்பதை கண்டோம்," என்று டெல்கடோ குறிப்பிடுகிறார்.
"ஐரோப்பியர்கள் அல்லது ஆப்பிரிக்கர்கள் போன்ற மக்களுடன் ஒப்பிடும்போது, லத்தீன் அமெரிக்கர்கள் ஒப்பீட்டளவில் புதிய மக்கள்தொகையாக இருந்தாலும், காலனித்துவ காலத்தில் ஏற்பட்ட கலப்பின மரபு அவர்களை மரபணு பல்வகைத் தன்மையின் ஒரு வண்ணக் கலவை போல மாற்றியுள்ளது'' என்று அந்த ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
இந்த மரபணு பல்வகைத் தன்மையே, நியாண்டர்தால்களுக்கும் ஆய்வில் பங்கேற்ற சிலருக்கும் இடையிலான மரபணுத் தொடர்புகளை கண்டறிய உதவியதாக அவர் கூறுகிறார்.
இதற்கு முன் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், தென் அமெரிக்கர்களில் சிலரிடம் டெனிசோவன்கள் எனப்படும் மற்றொரு பண்டைய மனித இனத்திடமிருந்து வந்த மரபணுத் தடயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை பூர்வகுடி அமெரிக்க மூதாதையர்களிடமிருந்து வந்தவை என்றும், அவற்றின் தாக்கம் உதடுகளின் தடிமனில் பிரதிபலிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
லத்தீன் அமெரிக்காவின் பன்முகத்தன்மை மற்றும் பரிணாம பகுப்பாய்வுக்கான கூட்டமைப்பு பிற ஆராய்ச்சிகளையும் வெளியிட்டுள்ளது. 'இன்னும் வெளிவரவிருக்கும் ஆய்வுகள் பல உள்ளன' என்று புவென்டெஸ் கூறுகிறார்.
லா பிளாட்டா தேசியப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் டெல்கடோவைப் பொறுத்தவரை, இது போன்ற ஆராய்ச்சிகள் ''நாம் அனைவரும் ஒரே பன்முகத்தன்மையின் ஒரு பகுதி'' என்பதை நிரூபிக்கின்றன.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு