You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் அருகே எண்ணெய் கப்பலை தாக்கிய அமெரிக்கா - குவைத், பஹ்ரைனை நோக்கி இரானும் தாக்குதல்
நேற்று நள்ளிரவு அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு மற்றும் அமெரிக்க வான்படைத் தளம் ஆகியவற்றை, தான் இலக்கு வைத்ததாக இரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தங்களது தொலைத்தொடர்பு ஆண்டெனா மற்றும் இரானிய எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல் ஆகியவற்றை இலக்கு வைத்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐஆர்ஜிசி கூறுகிறது.
இதற்கிடையில், இரானின் பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைத் தான் இடைமறித்து அழித்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.
பிபிசி பெர்சியன் செய்தியின்படி, "பிராந்தியம் முழுவதும் தாக்குதல் நடத்த இரான் மேற்கொண்ட முயற்சிகளுக்குப்" பதிலடியாக, கெஷ்ம் தீவில் உள்ள சில இலக்குகளுக்கு எதிராகத் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியதாக செண்ட்காம் கூறியுள்ளது.
இதற்கு முன்பு இரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு காலியான எண்ணெய் கப்பலைத் தான் இலக்கு வைத்ததாக அமெரிக்கா கூறியிருந்தது.
போட்ஸ்வானா கொடியுடன் சென்ற எம்/டி கப்பலின் எஞ்சின் அறையை நோக்கி அமெரிக்க விமானம் ஒன்று ஹெல்ஃபயர் ஏவுகணையை வீசியதாக செண்ட்காம் கூறியுள்ளது.
"ஆக்கிரமிப்பு நடந்தால் அதற்கான பதில் நடவடிக்கை வேறுபட்டதாகவும், மிகவும் கடுமையானதாகவும் இருக்கும் என்று நாங்கள் ஏற்கெனவே எச்சரித்திருந்தோம், அதன்படியே நாங்கள் செயல்பட்டுள்ளோம்," என்று ஐஆர்ஜிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 13 முதல் ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள இரானிய துறைமுகங்களுக்குச் செல்லக்கூடிய மற்றும் அங்கிருந்து வரக்கூடிய அனைத்துக் கப்பல்களுக்கும் அமெரிக்க ராணுவம் முற்றுகை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்ட்காம் என்ன கூறியது?
அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளை நோக்கி இரான் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாகவும், ஆனால் அவற்றில் எதுவும் தங்களின் இலக்குகளை அடையவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
குவைத் மீது வீசப்பட்ட இரண்டு ஏவுகணைகள் இலக்குகளை அடைவதற்கு முன்பே நொறுங்கி விழுந்தன அல்லது அழிக்கப்பட்டன என்றும், பஹ்ரைன் மீது வீசப்பட்ட மற்ற மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் வான் பாதுகாப்பு அமைப்புகளால் விரைவாக இடைமறிக்கப்பட்டன என்றும் அமெரிக்கா கூறியது.
பிபிசி பெர்சியன் செய்தியின்படி, குவைத்தில் குறைந்தது மூன்று வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், அமெரிக்காவின் ஒரு பேட்ரியாட் அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் இரானிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
"இந்தப் பகுதி வழியே கடந்து செல்லும் சிவிலியன் கப்பல்களை நோக்கி இரான் ஏவிய மூன்று தற்கொலை டிரோன்களை செண்ட்காம் படைகள் சுட்டு வீழ்த்தின," என்றும் சென்ட்காம் அறிக்கை தெரிவித்தது.
கெஷ்ம் தீவில் உள்ள இரானிய ராணுவத்தின் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை அமெரிக்க ராணுவம் தற்காப்புக்காகத் தாக்கியதாக செண்ட்காம் கூறியுள்ளது.
இது ஐஆர்ஜிசி -இன் அறிக்கையுடன் ஒத்துப்போகிறது.
கெஷ்ம் தீவுக்குத் தெற்கே உள்ள ஒரு தொலைத்தொடர்புக் கோபுரத்தை இலக்கு வைத்ததே, அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு தலைமையகத்தின் மீதான தாக்குதலுக்குக் காரணம் என அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த மோதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் யாரும் காயமடையவில்லை.
தற்போதைய போர்நிறுத்தத்தின் போது தங்களது படைகள் விழிப்புடன் இருக்கும் என்றும், "இரானின் தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பை" முறியடிக்க முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
எண்ணெய் கப்பலை குறிவைத்த அமெரிக்கா
ஹோர்மூஸ் நீரிணையில் வாஷிங்டன் விதித்துள்ள கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, இரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு காலியான எண்ணெய் கப்பலைத் தான் தாக்கி, "செயலிழக்கச்" செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போட்ஸ்வானா கொடியுடன் சென்ற எம்/டி கப்பலின் எஞ்சின் அறையை அமெரிக்க விமானம் ஒன்று ஹெல்ஃபயர் ஏவுகணையால் தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
செண்ட்காம் கூற்றுப்படி, அக்கப்பலின் பணியாளர்கள் "தொடர்ச்சியான எச்சரிக்கைகளைப் புறக்கணித்தனர்."
எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீதான தாக்குதல் தொடர்பானதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகளையும் செண்ட்காம் செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து இரான் இதுவரை பகிரங்கமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இரானிய துறைமுகங்களுக்குள் நுழையக்கூடிய மற்றும் அங்கிருந்து வெளியேறக்கூடிய அனைத்துக் கப்பல்களுக்குமான முற்றுகையை ஏப்ரல் 13 முதல் அமெரிக்க ராணுவம் அமல்படுத்தத் தொடங்கியது.
"கார்க் தீவை நோக்கி சர்வதேச கடல் பகுதியில் போட்ஸ்வானா கொடியுடன் சென்று கொண்டிருந்த எம்/டி லெக்சி கப்பலுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் முற்றுகை நடவடிக்கைகளை மேற்கொண்டன" என்று செண்ட்காம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செண்ட்காம் கூற்றுப்படி, இந்த முற்றுகை விதிக்கப்பட்டதில் இருந்து மொத்தம் ஆறு வணிகக் கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன மற்றும் 122 கப்பல்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டாலும், இரானின் மீதான தடைகள் நீக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் தடைகளை நீக்குவது ஒரு முக்கியப் பிரச்னையாக இருந்து வருகிறது.
பிபிசி உருது செய்தியின்படி, அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில், "ஒரு மாதத்திற்கு முன்போ அல்லது ஒரு வருடத்திற்கு முன்போ இரான் குறிப்பிடாத, அதன் அணுசக்தி திட்டத்தின் அம்சங்கள்" குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ரூபியோ கூறினார்.
மேலும், "ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் ஒப்பந்தம் எட்டப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை," என்றும் அவர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்க செனட் வெளியுறவு குழுவின் முன்னிலையில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்த ரூபியோ, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை ஆதரித்துப் பேசியதுடன், அவை "மிகவும் வெற்றிகரமானவை" என்றும் குறிப்பிட்டார்.
"ஆபரேஷன் எபிக் ஃபியூரி அதன் ராணுவ நோக்கங்களை அடைவதில் வெற்றி பெற்றுள்ளது, இரானின் பாதுகாப்புஅமைப்பை பலவீனப்படுத்தியுள்ளது" என்று அவர் கூறினார்.
"இன்று இரானிடம் கடற்படை இல்லை" என்றும் தெரிவித்த மார்கோ ரூபியோ, ஹோர்மூஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டாலும், இரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அமெரிக்கா நீக்காது என்று கூறினார்.
"எந்த விவாதமும், எந்த முன்மொழிவும் முன்வைக்கப்படவில்லை," என்று அமெரிக்க செனட் உறுப்பினர்களிடம் ரூபியோ கூறினார்.
இருப்பினும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் அணுசக்தித் திட்டம் தொடர்பான அம்சங்களை இரான் கைவிட்டால், 'நிபந்தனைகளுக்கு உட்பட்டு' தடைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு