இரு துருவங்களாக கருதப்படும் மெஸ்ஸி - ரொனால்டோ இடையிலான வியக்க வைக்கும் ஒற்றுமைகள்

மெஸ்ஸி - ரொனால்டோ, உலகக்கோப்பை கால்பந்து - 2026

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆண்டி கிரையர்
    • பதவி, பிபிசி ஸ்போர்ட் மூத்த பத்திரிகையாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

பிரேசிலின் காகா 2007 ஆம் ஆண்டின் பிஃபா சிறந்த வீரர் விருதை அப்போதுதான் வென்றிருந்தார். அவருக்கு அருகில் மேடையில் நடந்த ஒரு சங்கடமான தருணம் தான் இணையத்தில் வைரலாகி, ஒரு தலைமுறைக்கான போட்டி எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான முதல் பார்வையை நமக்குக் கொடுத்தது.

இளம் வயது மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்திருந்தனர். ஆனால் பிரேசில் ஜாம்பவான் பீலே, சூரிச் ஓபரா ஹவுஸில் தவறுதலாக ரொனால்டோவிடம் இரண்டாம் இடத்திற்கான கோப்பையைக் கொடுத்துவிட்டார்.

பிஃபா தலைவர் செப் பிளாட்டர் இதில் தலையிட்டு, இருவரையும் கோப்பைகளை மாற்றிக் கொள்ளுமாறு கேட்க வேண்டியிருந்தது. அப்போது இரண்டு பேருமே முகத்தில் எந்த ஒரு மகிழ்ச்சியும் இல்லாமல் அதிருப்தியோடு காணப்பட்டனர்.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு, மெஸ்ஸி அல்லது ரொனால்டோ தான் அனைத்து பாலன் டி ஆர் மற்றும் பிஃபா விருதுகளையும் அள்ளிக் குவித்தனர். சொல்லப்போனால், 2007 முதல் ஐரோப்பாவின் சிறந்த வீரருக்காக வழங்கப்பட்ட 29 விருதுகளில் 20 விருதுகள் இவர்களில் ஒருவருக்குத்தான் கிடைத்துள்ளன.

மெஸ்ஸி - ரொனால்டோ, உலகக்கோப்பை கால்பந்து - 2026

ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2007 பிஃபா சிறந்த வீரர் விருது வழங்கும் விழாவில் காகா, ரொனால்டோ, மெஸ்ஸி.

இருவரும் சேர்ந்து தங்களது கால்பந்து வாழ்க்கையில் கிட்டத்தட்ட 2,000 கோல்களை நெருங்கியுள்ளனர். கிளப் மற்றும் நாட்டுக்காக 85 கோப்பைகளை வென்றுள்ளனர். எண்ணற்ற தனிநபர் விருதுகளையும் சாதனைகளையும் படைத்துள்ளனர். வரலாற்றில் மிகச் சிறந்த சாதனைகளைப் படைத்த இரு வீரர்களாக மெஸ்ஸியும் ரொனால்டோவும் எப்போதும் நினைவுகூரப்படுவார்கள்.

இது கடந்த இரண்டு தசாப்த கால கால்பந்து விளையாட்டையே தீர்மானித்த ஒரு போட்டியாகும். கிளப்புகள், நாடுகள் மற்றும் போட்டிகளைக் கடந்து, இந்த விளையாட்டு உலகம் முழுவதும் எப்படி விளையாடப்படுகிறது, எப்படி ரசிக்கப்படுகிறது மற்றும் எப்படி விவாதிக்கப்படுகிறது என்பதையே இது மாற்றி அமைத்திருக்கிறது.

"அவர்களைப் போன்ற இரண்டு வீரர்கள், இத்தனை ஆண்டுகள் அந்த உயரிய மட்டத்தில் போட்டியிட்டு, பாலன் டி ஆர் விருதுக்காக மோதி, இவ்வளவு கோல்களை அடிப்பது... இதை நாம் மீண்டும் பார்ப்போம் என்று எனக்குத் தோன்றவில்லை," என்று இருவருடனும் விளையாடிய உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியில் இடம் பெற்றிருந்த வீரரான ஏஞ்சல் டி மரியா, பிபிசி ஸ்போர்ட்டின் புதிய ஆவணப்படமான 'போட்டியாளர்கள்: மெஸ்ஸி vs ரொனால்டோ' (Rivals: Messi v Ronaldo) என்பதில் கூறுகிறார்.

கோப்பைகள், சாதனைகள் மற்றும் சிறந்தவராக இருக்க வேண்டும் என்ற இடைவிடாத வேட்கையால் உந்தப்பட்ட இந்த இருவரும் ஒருவரை ஒருவர் புதிய உயரத்திற்குத் தள்ளியுள்ளனர். இருவருமே அநேகமாக இந்த கோடையில் தங்களது கடைசி உலகக் கோப்பையில் விளையாடப் போகிறார்கள் -

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இது 'எல்லா காலத்திலும் மிகச் சிறந்தவர்' (greatest of all time) என்ற விவாதத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு போட்டியாகும்.

"அவர்கள் இருவரும் கால்பந்தையே மாற்றிவிட்டார்கள்," என்கிறார் டி மரியா.

யார் சிறந்தவர் என்று யாரிடம் கேட்டாலும், எல்லாரும் ஒரே பதிலைச் சொல்வது கஷ்டம் தான்.

"அது ரொனால்டோவாகத்தான் இருக்க வேண்டும்," என்கிறார் மான்செஸ்டர் யுனைடெட்டின் முன்னாள் சக வீரர் ரியோ பெர்டினாண்ட்.

"மெஸ்ஸி தான் இதுவரை வாழ்ந்தவர்களிலேயே சிறந்த கால்பந்து வீரர்," என்று உறுதியாகச் சொல்கிறார் பார்சிலோனாவின் முன்னாள் வீரரும் மேலாளருமான சேவி (Xavi).

ரொனால்டோ கடந்த காலத்தில் இதைப் பற்றிப் பேசியிருக்கிறார். 2012-ஆம் ஆண்டில் அவர் பேசுகையில், "நீங்கள் ஒரு பெராரியை போர்ஷேவுடன் ஒப்பிட முடியாது. அது வேறு என்ஜின். சிலர் நான் சிறந்தவன் என்கிறார்கள், சிலர் அவர் சிறந்தவர் என்கிறார்கள். அந்தந்த தருணத்தில் யார் சிறந்தவர் என்பதை அவர்கள் தான் முடிவு செய்வார்கள், என்னை பொறுத்தவரை அது நான் தான் என்று நினைக்கிறேன்."

புள்ளிவிவரங்கள் நமக்கு என்ன சொல்கின்றன? கோல்கள் அல்லது சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளின் அடிப்படையில் பார்த்தால், ரொனால்டோ தான் முன்னிலையில் இருக்கிறார். பாலன் டி ஆர் அல்லது மொத்த கோப்பைகளின் அடிப்படையில் பார்த்தால், மெஸ்ஸி கொஞ்சம் முந்துகிறார்.

சிலரைப் பொறுத்தவரை, 2016 இல் போர்ச்சுகல் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை வெல்ல ரொனால்டோ உதவியபோது அவர் சற்று முன்னிலைக்கு வந்தார், ஆனால் மெஸ்ஸி அதன் பிறகு அர்ஜென்டினாவை இரண்டு கோபா அமெரிக்கா பட்டங்களுக்கும் ஒரு உலகக் கோப்பைக்கும் வழிநடத்தியுள்ளார்.

"என்னை பொறுத்தவரை, மெஸ்ஸி தான் வரலாற்றிலேயே சிறந்த வீரர், கிறிஸ்டியானோ தான் வரலாற்றிலேயே சிறந்த கோல் அடிப்பவர்," என்கிறார் இரு வீரர்களின் சுயசரிதைகளையும் எழுதிய ஸ்பானிய கால்பந்து நிபுணர் கில்லெம் பலாக்.

போர்ச்சுகலுக்காக ரொனால்டோவுடனும், பார்சிலோனாவிற்காக மெஸ்ஸியுடனும் விளையாடிய டெகோ கூறுகையில் "அவர்கள் சிறந்தவர்கள். மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். இத்தனை வருடங்களாக இவ்வளவு உயர்ந்த மட்டத்தில் இருப்பது சாதாரண விஷயம் அல்ல.

"சில வருடங்களுக்கு அற்புதமான விஷயங்களைச் செய்யும் பல வீரர்கள் வருகிறார்கள், ஆனால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்த மட்டத்தில் விளையாடுவது சாதாரணமானது அல்ல."

ஒருவேளை இந்த 'GOAT' விவாதத்தின் அழகே, இது ஒருபோதும் முடிவுக்கு வராது என்பதுதான் - அது தேவையற்றதும் கூட.

"கடந்த 20 ஆண்டுகளாக அவர்கள் நடித்து வரும் கால்பந்து நாடகத்தின் சக நட்சத்திரங்களாக ஒருவரையொருவர் அவர்கள் மதிக்கத் தொடங்கியுள்ளனர்," என்கிறார் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி பற்றிய புத்தகத்தை இணைந்து எழுதிய ஜொனாதன் கிளெக்.

மெஸ்ஸி - ரொனால்டோ, உலகக்கோப்பை கால்பந்து - 2026

பட மூலாதாரம், David Ramos/Getty Images

இந்த ஜோடியை பலர் இரு வேறு துருவங்களாகவே பார்க்கிறார்கள்

உடல் வலிமைக்கு எதிராக டிரிப்ளிங் செய்யும் திறமை. திமிர் பிடித்த அகந்தைக்கு எதிராக வெட்கப்படும் மேதை. ஜோஸ் மொரின்ஹோவின் ரியல் மாட்ரிட்டுக்கு எதிராக பெப் கார்டியோலாவின் பார்சிலோனா. நைக்கிற்கு எதிராக அடிடாஸ்.

ஆனால், இவர்களது போட்டியின் கதைக்களம் சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களின் வேறுபாடுகளின் மேல் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன - அதுவும் சிறு வயதிலிருந்தே.

இரு வீரர்களுமே ஏழ்மையான சூழலில் வளர்ந்தவர்கள். இருவருமே தங்களது கனவுகளைத் துரத்துவதற்காக சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினர். மெஸ்ஸி 13 வயதில் அர்ஜென்டினாவிலிருந்து பார்சிலோனாவிற்கும், ரொனால்டோ 12 வயதில் மதேராவிலிருந்து லிஸ்பனுக்கும் சென்றனர். இருவருமே தங்களது குடும்பத்தை விட்டு பிரிந்த பிறகு வீட்டின் நினைவால் ஏங்கினர்.

மெஸ்ஸி ரொனால்டோ புத்தகத்தின் இணை ஆசிரியரும், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபருமான ஜோசுவா ராபின்சன் கூறுகையில் "மெஸ்ஸியும் ரொனால்டோவும் எப்போதும் முற்றிலும் மாறுபட்டவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்களின் குழந்தைப் பருவத்தை வடிவமைத்த விஷயங்கள் நம்ப முடியாத அளவிற்கு ஒரே மாதிரியானவை." என்றார்.

"அவர்கள் இருவருமே 'நாங்கள் உங்கள் திறமையை எடுத்துக்கொண்டு உங்களை இன்னும் சிறந்தவராக்குவோம்' என்று சொல்லும் ஒரு இடத்திற்குச் செல்கிறார்கள். அந்த வாக்குறுதி கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும் அது ஒரு பெரிய சூதாட்டம். அந்த முழுமையான அர்ப்பணிப்பின் தருணத்தில் தான் இது இனி குழந்தைகளுக்கான விளையாட்டு அல்ல என்பதை அவர்கள் உணர்கிறார்கள். 'நான் எல்லா காலத்திலும் சிறந்தவனாக மாறப் போகிறேன் என்றால், அது இங்கிருந்துதான் தொடங்குகிறது.'"

மெஸ்ஸி - ரொனால்டோ, உலகக்கோப்பை கால்பந்து - 2026

பட மூலாதாரம், Getty Images

ஆனால் இந்த ஜோடியை ஒன்றாக இணைத்த மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் தங்களை அசாத்திய திறமையுள்ள இளம் வீரர்களாக மிக விரைவாக நிலைநிறுத்திக் கொண்டதால், வெற்றிக்கான அவர்களின் அசைக்க முடியாத ஆசை தான்.

"மெஸ்ஸியிடம் ஏற்கனவே ஏதோ ஒரு வித்தியாசத்தை உங்களால் பார்க்க முடிந்தது," என்றார் சேவி. "திறமை மட்டுமல்ல, அவர் விஷயங்களைச் செய்த தீவிரமும் தான். ஆட்டத்தில் நான் இதுவரை பார்த்திராத ஒரு ஆக்ரோஷம் அவரிடம் இருந்தது.

"கிறிஸ்டியானோ அவரை இன்னும் சிறந்த வீரராக மாற்றுவதற்கு கூடுதல் உந்துதலைக் கொடுத்தார்."

அதே நேரத்தில் பிரிட்டனில் ஒரு டீனேஜ் ரொனால்டோ ஸ்போர்ட்டிங்கிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தமாகி இருந்தார்.

"தான் என்ன விரும்புகிறோம் என்பதில் இவ்வளவு நம்பிக்கையுடன் இருந்த ஒரு இளம் வீரரை நான் பார்த்ததே இல்லை," என்கிறார் அந்த நேரத்தில் கிளப்பில் பணிபுரிந்த ரெனே முலன்ஸ்டீன். "அவர் மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு வந்த தருணம், அவர் என்னவாக விரும்பினாரோ - உலகின் சிறந்த வீரராக மாறுவதற்கான ஒரு படியாகவே அது இருந்தது.

"கிறிஸ்டியானோ எதையும் வேகமாக கற்றுக் கொள்பவர். கோல் அடிக்கக் கூடிய ஒருவரை சிறந்த கோல் அடிப்பவராக மாற்ற நான் விரும்பினேன். அவர் கோல் அடித்ததையும், பின்னர் அவர் கோல் அடிக்கத் தவறிய வாய்ப்புகளையும் காட்டும் ஒரு மூன்று நிமிட வீடியோவை நான் தயாரித்தேன். அவர் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார்."

2008ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு போனோம். மான்செஸ்டர் யுனைடெட் எதிர் பார்சிலோனா. முதன்முறையாக ரொனால்டோ எதிர் மெஸ்ஸி.

"லா லிகாவில் மெஸ்ஸி சிறந்தவர், பிரீமியர் லீக்கில் கிறிஸ்டியானோ சிறந்தவர் என்பதை உங்களால் ஏற்கனவே பார்க்க முடிந்தது," என்கிறார் ஸ்பானிய கால்பந்து பத்திரிகையாளர் கில்லெம் பலாக். "அந்த இரண்டு சிறுவர்களும் ஒன்றாக மைதானத்தில் இருப்பதை பார்ப்பதே இனி வரப்போகும் ஒன்றின் அறிகுறியாக இருந்தது."

மான்செஸ்டர் யுனைடெட் கோப்பையை வென்றது, ரொனால்டோ பாலன் டி ஆர் விருதை வென்றார். பல தலைமுறைகளுக்கான ஒரு போட்டி அப்போதுதான் தொடங்கியது.

"ஒரே லீக்கில் இருவரும் இருந்தது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை," என்கிறார் 2003 மற்றும் 2010 க்கு இடையில் பார்சிலோனாவின் கால்பந்து இயக்குநராக இருந்த சிக்சி பெகிரிஸ்டைன்.

2009 இல் ரொனால்டோ உலக சாதனையாக 80 மில்லியன் பவுண்டுகளுக்கு ரியல் மாட்ரிட் அணிக்கு மாறியது, கால்பந்தின் மிகக் கடுமையான கிளப் போட்டிகளில் ஒன்றான பார்சிலோனா எதிர் ரியல் மாட்ரிட் போட்டியின் மையப்புள்ளிக்கு இந்த இருவரையும் தள்ளியது.

2018 இல் ரொனால்டோ ஜுவென்டஸ் அணிக்கு வெளியேறிய நேரத்தில், இந்த ஜோடி தலா ஐந்து பாலன் டி ஆர் விருதுகளை வென்றிருந்தது. ஸ்பெயினில் இந்த இருவரும் ஒரே லீக்கில் விளையாடிய ஒன்பது சீசன்களில், ரியல் மாட்ரிட் அணிக்காக 438 போட்டிகளில் ரொனால்டோ 450 கோல்களை அடித்திருந்தார். மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக 476 போட்டிகளில் 471 கோல்களை அடித்திருந்தார்.

ஆனால் இது வெறும் எண்களைத் தாண்டிய ஒன்றாக மாறிவிட்டது. இப்போது, இது தனிப்பட்ட போட்டியாக உருவெடுத்தது. சமூக ஊடகங்களின் வளர்ச்சி காரணமாக உலகமே இதை கவனித்துக் கொண்டிருந்தது.

"'நான் இந்த ஆளை தோற்கடிக்க வேண்டும்' என்கிற வேட்கை இருந்ததென்றால் கிறிஸ்டியானோவுக்கு அது லியோனல் மெஸ்ஸி, லியோனல் மெஸ்ஸிக்கு அது கிறிஸ்டியானோ." என்றார் பெகிரிஸ்டைன்.

"மொரின்ஹோ - கார்டியோலா போட்டி என்பது ரொனால்டோ - மெஸ்ஸி போட்டிக்கான ஒரு கண்ணாடி போல இருந்தது. ஒரு வீரராக, போட்டியை வெல்லும் கோல்கள் தான் தங்களின் மேலாதிக்கத்திற்கான வழி என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்," என்று ஸ்பானிய கால்பந்து எழுத்தாளர் சிட் லோ மேலும் கூறினார்.

"நாம் அனைத்தையும் நம் தொலைபேசிகளில் பார்க்க முடிந்தது. இதையொட்டி, மெஸ்ஸி - ரொனால்டோ போட்டிக்கான உலகளாவிய விளம்பரம் இப்போது விண்ணை முட்டியது, முற்றிலும் எல்லைகளைத் தாண்டியது. அவர்கள் செய்த எல்லாமே கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்றாக இருந்தது.

"செய்தியாளர்கள் அறை, செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடக கருத்துகளில் அனைவரின் உதடுகளிலும் இதுதான் இருந்தது, கிறிஸ்டியானோவும் லியோவும் மைதானத்தில் ஒருவரை ஒருவர் விஞ்ச வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். மேலாதிக்கத்திற்கான அவர்களின் தனிப்பட்ட போராட்டம், கிளப்புகளுக்கு இடையிலான தொடர்ச்சியான கோப்பை போரின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டது."

மெஸ்ஸி - ரொனால்டோ, உலகக்கோப்பை கால்பந்து - 2026

பட மூலாதாரம், Getty Images

அது என்ன ஒரு போர்! மெஸ்ஸியும் பார்சிலோனாவும் சந்தேகத்திற்கு இடமின்றி லா லிகா பட்டங்களை வென்றனர், ஆனால் சாம்பியன்ஸ் லீக்கில் ரியல் மாட்ரிட்டும் ரொனால்டோவும் ஆதிக்கம் செலுத்தினர்.

2012 இல், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியை அவர்களின் நான்கு ஆண்டுகளில் முதல் லா லிகா பட்டத்திற்கு வழிநடத்தினார். ஆனால் மெஸ்ஸி தொடர்ந்து நான்காவது பாலன் டி ஆர் விருதை வென்றார். இது அவரது எதிராளிக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர் அடுத்த ஐந்தில் நான்கை வெல்லச் சென்றார்.

"ஓர் உண்மையான பகைமை வளரத் தொடங்குகிறது," என்கிறார் ராபின்சன். "அவர்கள் ஒருவரை ஒருவர் அவ்வளவாக அங்கீகரிக்கவில்லை, ஒப்பீடுகளை அவர்கள் வெறுத்தார்கள்."

"தங்கள் சகாப்தத்தில், தங்கள் கால்பந்து லீக்கில் மற்றொருவர் எல்லா காலத்திலும் சிறந்தவராக இருப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை."

டெகோ மேலும் கூறுகையில் "மெஸ்ஸி - ரொனால்டோ போன்ற ஒரு விஷயம் இந்த நேரத்தில் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் அந்த நேரத்தில் பார்சிலோனா மற்றும் மாட்ரிட் ஆகிய இரு கிளப்புகளும் ஒரே மட்டத்தில் இருந்தன மற்றும் பெரிய கோப்பைகளுக்காக போராடின."

2017 இல் ரியல் மாட்ரிட் மைதானத்தில் பார்சிலோனாவுக்காக மெஸ்ஸி 92 வது நிமிடத்தில் வெற்றி கோலை அடித்தபோது, அவர் தனது ஜெர்சியைக் கழற்றி கூட்டத்தினரிடையே காட்டினார்.

"பொதுவான கதைகளில், கிறிஸ்டியானோ ஒரு திவாவாகவும், மெஸ்ஸி பார்சிலோனாவின் அடக்கமான ஊழியராகவும் பார்க்கப்பட்டார், ஆனால் மெஸ்ஸி இந்த போட்டியில் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்ட தருணம் இது, தனது வாழ்க்கையில் முதல்முறையாக 'என்னை பாருங்கள்' என்று சொல்வது போல் இருந்தது," என்கிறார் ராபின்சன்.

சில மாதங்களுக்குப் பிறகு, பார்சிலோனாவில் நடந்த ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை ஆட்டத்தில் ரொனால்டோ கோல் அடித்தபோது அதேபோன்ற கொண்டாட்டத்தைப் பிரதிபலித்தார்.

பலாக் மேலும் கூறுகையில் "ஒருவரை ஒருவர் தோற்கடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கான ஆதாரம் உங்களுக்குத் தேவைப்பட்டால், அந்தப் படங்கள் தான் அது."

மெஸ்ஸி - ரொனால்டோ, உலகக்கோப்பை கால்பந்து - 2026

பட மூலாதாரம், Nicolò Campo/LightRocket via Getty Images

ஸ்பெயினில் மெஸ்ஸி vs ரொனால்டோ போட்டி 2018 இல் ரொனால்டோ ஜுவென்டஸில் சேர்ந்தபோது முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் உலகளாவிய, தொடர்ச்சியான விவாதம் மறைந்துவிடவில்லை.

ரொனால்டோ செளதி அரேபியாவின் தற்போதைய கிளப்பான அல்-நாசருக்கு மாறுவதற்கு முன்பு மான்செஸ்டர் யுனைடெட்டுக்குத் திரும்பினார். அதே நேரத்தில் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைனுக்கு மாறினார். பின்னர் அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கரில் உள்ள இண்டர் மயாமிக்கு ஒப்பந்தமானார். அங்கு அவர் இப்போது வரை இருக்கிறார்.

ஸ்பெயினில் அவர்களின் தாக்கத்தைப் பார்த்த பிறகு, முதல்முறையாக வீரர்களின் இடமாற்றங்கள் கால்பந்து காரணங்களுக்காக இருந்ததைப் போலவே வணிக ரீதியாகவும் தூண்டப்பட்டன.

"பிராண்ட் பெக்காம் சாத்தியமானவற்றுக்கான கதவைத் திறந்தது. இந்த இருவரும் அந்த கதவையே உடைத்து எறிந்தனர்," என்கிறார் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவுக்கான மெட்டாவின் விளையாட்டுத் தலைவர் ராப் பில்கிரிம்.

இத்தாலிய கால்பந்து நிபுணர் மினா ரசௌகி, "நீங்கள் விளையாட்டின் சிறப்பை மட்டும் வாங்கவில்லை, ஒரு தனிமனித பொருளாதாரத்தையே வாங்குகிறீர்கள்." என்று கூறுகிறார்.

இதற்கான எண்கள் மிகப் பெரியவை மற்றும் இருவருக்கும் இடையிலான போட்டி தொடர்ந்தது.

2018 இல், ரொனால்டோ ஜூவென்டஸில் சேர்ந்த முதல் 24 மணிநேரத்தில் 5,20,000 சட்டைகள் விற்றன. 2021 இல், மெஸ்ஸி பாரிஸுக்கு மாறிய வெறும் ஏழு நிமிடங்களில் 1,50,000 சட்டைகள் விற்றன.

மான்செஸ்டர் யுனைடெட் 2021 இல் ரொனால்டோவை மீண்டும் வரவேற்கிறது. யுனைடெட்டில் அவரது சட்டையின் மொத்த விற்பனை (187 மில்லியன் பவுண்டுகள்) பிஎஸ்ஜியில் மெஸ்ஸியின் விற்பனையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும்.

இன்ஸ்டாகிராமில் ரொனால்டோவை 70 கோடி பேர் பின்தொடர்கின்றனர். அதேநேரத்தில், மெஸ்ஸியை 50 கோடி பேர் பின்தொடர்கின்றனர். அந்த தளத்தின் வரலாற்றில் மிகவும் விரும்பப்பட்ட (most-liked) படம் அர்ஜென்டினா வீரர் உலகக் கோப்பையை உயர்த்திப் பிடித்தது தான். அது 70 கோடிக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றது.

மெஸ்ஸி - ரொனால்டோ, உலகக்கோப்பை கால்பந்து - 2026

பட மூலாதாரம், Getty Images

நிதி ரீதியாக, ரொனால்டோ தான் முதலிடத்தில் இருக்கிறார் - அதிகாரப்பூர்வ சேனல்களின்படி பார்த்தால். போர்ப்ஸ் பட்டியலில் உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரராக அவர் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார், அவரது மொத்த வருமானம் 300 மில்லியன் டாலர் (223 மில்லியன் பவுண்டுகள்). மெஸ்ஸி 140 மில்லியன் டாலருடன் (104 மில்லியன் பவுண்டுகள்) பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையேயான போட்டி விளையாட்டு மட்டுமின்றி ஆடை பிராண்டு வரை நீள்கிறது. இருபுறமும் அவர்கள் இருப்பதன் மூலம் போட்டி இன்னும் தீவிரமடைகிறது. மெஸ்ஸி அடிடாஸுடனும், ரொனால்டோ நைக் உடனும் இருக்கிறார்கள்.

"அவர்கள் பிரமாண்டமான உலகளாவிய பிராண்டுகளாக மாறிவிட்டனர், அவர்களைப் பற்றிய ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், உலகின் மிகப்பெரிய விளம்பரதாரராக மாறுவதற்கு அவர்கள் கிட்டத்தட்ட எதையும் பேச வேண்டியதில்லை," என்கிறார் ராபின்சன்.

உலகெங்கிலும் உள்ள பிராண்டுகள் இந்த சூப்பர் ஸ்டார்களை தங்கள் வசம் கொண்டு வர ஈடிலா தொகையை வாரி இறைத்தன.

கத்தாரில் நடந்த 2022 உலகக் கோப்பைக்கு முன்னதாக, லூயி விட்டான் சூட்கேஸின் மேல் இரண்டு கால்பந்து வீரர்களும் ஒருவருக்கொருவர் சதுரங்கம் விளையாடும் அந்த படத்தை யார் தான் மறக்க முடியும்?

"இது இணையத்தையே கலக்கிய படம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வணிக ரீதியான மாஸ்டர் ஸ்ட்ரோக்," என்கிறார் சமூக ஊடக சந்தைப்படுத்தல் நிறுவனமான தி கோட் ஏஜென்சியைச் சேர்ந்த மெலனி ராப். "உலகக் கோப்பைக்கு முன்பாக இது வந்த நேரம், இதை உலகளவில் ஒரு அடையாளமாக மாற்றியது."

மெஸ்ஸி - ரொனால்டோ, உலகக்கோப்பை கால்பந்து - 2026

பட மூலாதாரம், Getty Images

எனவே, நாம் தொடங்கிய இடத்திற்கே வருவோம்.

"மெஸ்ஸிக்கு இனி வெல்வதற்கு எதுவும் மிச்சமில்லை. ரொனால்டோவிடம் இல்லாத ஒரு விஷயம் அவரிடம் உள்ளது, அது உலகக் கோப்பை. இப்போது கேள்வி என்னவென்றால், மெஸ்ஸி இந்த முழு கால்பந்து சகாப்தத்தையும் வென்றுவிட்டாரா?" என்கிறார் ராபின்சன்,

இந்தக் கதை இன்னும் முடிவடையவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த உலகக் கோப்பையின் பிந்தைய கட்டங்களில் அர்ஜென்டினாவும் போர்ச்சுகலும் சந்திக்கக்கூடும் என்பதால், இறுதி ஆட்டம் இன்னும் ஆடப்பட வேண்டியிருக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு